ஆங்கிலேய கலெக்டரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி அம்மன் – உண்மை சம்பவம்

 அம்பிகையின் அருள் பெற்ற கலெக்டர்…

 

1812 முதல் 1828 வரை மதுரை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர் ரவுஸ் பீட்டர் என்ற ஆங்கிலேயர். அவர் ஆங்கிலேயராக இருந்தாலும்கூட, நம்முடைய கலாசாரத்தையும், ஆன்மிக உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவராக இருந்தார். மக்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் வராமல் பார்த்துக்கொண்டார். தங்களிடம் மிகுந்த அன்பு செலுத்தும் தங்கள் கலெக்டரை மதுரை மக்கள் பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தனர்.

தினமும் தன்னுடைய குதிரையில் ஏறி, மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வந்த பிறகே தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். அந்த அளவுக்கு அவர் அம்பிகையிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.

ஒருநாள் இரவு மதுரையில் இடியும் மின்னலுமாகப் பெருமழை பெய்தது. ஊழிக் காலம்தான் வந்துவிட்டதோ என்று அஞ்சி நடுங்கும்படியாக, பெருத்த காற்றுடன் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது.

மக்களுக்கு என்ன இடையூறு நேருமோ என்ற கவலையுடன் உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார் ரவுஸ் பீட்டர். நள்ளிரவு வேளையில், மூன்று வயதே ஆன சிறுமி ஒருத்தி அவருடைய அறைக்குள் நுழைந்தாள். தன்னுடைய தளிர்க் கரங்களால் அவருடைய கைகளைப் பிடித்து இழுத்து மாளிகைக்கு வெளியில் அழைத்து வந்தாள்.

சிறுமியும் கலெக்டரும் வெளியில் வந்ததுதான் தாமதம், அந்த மாளிகை அப்படியே இடிந்து விழுந்தது. தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய சிறுமி யார் என்பதும், உள்பக்கமாகப் பூட்டிய அறைக்குள் அவள் எப்படி வந்தாள் என்பதும் தெரியாமல் திகைத்த கலெக்டர், அந்த சிறுமிக்கு நன்றி சொல்லத் திரும்பினார்.

அதற்குள் அந்தச் சிறுமி தான் வந்த வேலை முடிந்துவிட்டது என்பதுபோல் அங்கிருந்து சென்றுவிட்டாள். சற்றுத் தொலைவில் அந்தச் சிறுமி சென்றுகொண்டிருப்பதைப் பார்த்த கலெக்டர், அந்தச் சிறுமிக்கு நன்றி சொல்ல ஓடினார். அந்தச் சிறுமி மெள்ள நடந்து செல்வதுபோல் தெரிந்தாலும், ஓட்டமாக ஓடிய கலெக்டரால் அந்தச் சிறுமியைப் பிடிக்க முடியவில்லை. இறுதியில் அந்தச் சிறுமி மீனாட்சியின் திருக்கோயிலுக்குள் சென்று மறைந்தே போனாள்.

தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது அம்பிகை மீனாட்சிதான் என்பதை புரிந்துகொண்ட கலெக்டர் ரவுஸ் பீட்டர், தன்னைக் காப்பாற்றியதற்காக ஓடோடி வந்த அம்பிகையின் மலர்ப் பாதங்கள் வலிக்குமே என்று எண்ணி, நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இரண்டு தங்கப் பாதணிகளைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார்.

மதுரை மீனாட்சி அம்மனால் காப்பாற்றப்பட்ட ‘ரவுஸ் பீட்டர்’ கலெக்டர்..!

 

 

கண் பார்வை அருளிய மீனாட்சி..!

ஒருமுறை தன்னுடைய மனைவிக்குச் சிலை வடிக்க விரும்பிய திருமலை நாயக்கர், சிற்பி ஒருவரைக் கொண்டு சிலை வடிக்க ஏற்பாடு செய்தார். சிற்பியும் சிலை வடிக்கத் தொடங்கினார். அரசியின் கால்களை வடிக்கும்போது எதிர்பாராதவிதமாக வலது கால் தொடைப் பகுதியில் ஒரு சிறு சில்லு பெயர்ந்து தெறித்தது. சிலையில் பின்னம் ஏற்படவே, வேறு ஒரு சிலையைச் செதுக்கத் தொடங்கினார். அப்போதும் முன்பைப் போலவே ராணியின் வலது தொடைப் பகுதியில் பின்னம் ஏற்பட்டது. அச்சம் கொண்ட சிற்பி, நீலகண்ட தீட்சிதரைச் சந்தித்து விவரம் கூறினார்.

சிற்பி சொன்னதைக் கேட்ட நீலகண்ட தீட்சிதர், கண்களை மூடி அம்பிகையைப் பிரார்த்தித்தார். ராணியின் வலது தொடையில் மச்சம் இருப்பது அவருக்குத் தெரிய வந்தது. எனவே அவர் சிற்பியிடம் சிலை அப்படியே அமையட்டும் என்று கூறி விட்டார். சிலை வடித்து முடிந்ததும் வந்து பார்த்த மன்னர் ராணியின் வலது தொடையில் மச்சம் இருப்பது சிற்பிக்கு எப்படித் தெரியவந்தது என்று சந்தேகம் கொண்டு சிற்பியை விசாரித்தார். நீலகண்ட தீட்சிதர்தான் காரணம் என்று புரிந்துகொண்ட மன்னர், தீட்சிதரின் நடத்தையில் சந்தேகம் கொண்டவராக அவரைக் கைது செய்து அழைத்து வரும்படி வீரர்களை அனுப்பினார். வீரர்கள் சென்றபோது, தீட்சிதர் அம்பிகைக்கு ஆரத்தி காட்டிக் கொண்டிருந்தார். மன்னருக்குத் தன் ஒழுக்கத்தில் சந்தேகம் தோன்றிவிட்டதையும், கைது செய்ய வீரர்களை அனுப்பி வைத்திருப்பதையும் அறிந்த தீட்சிதர், மனம் வருந்தியவராக கற்பூர ஜோதியினால் தன்னுடைய இரண்டு கண்களையும் பொசுக்கிக் கொண்டார்.

 

நடந்ததை வீரர்கள் மூலம் அறிந்த மன்னர், விரைந்து வந்து தீட்சிதரின் பாதங்களில் பதிந்து வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். பின்னர் நீலகண்ட தீட்சிதர் மீனாட்சி அம்பிகையைப் போற்றி ஆனந்த சாகர ஸ்தவம் என்ற பெயரில் நூற்றியெட்டு ஸ்லோகங்களைப் பாடினார். அம்பிகையின் அருளால் பார்வையும் திரும்பப் பெற்றார்.

எட்டு திருக்கோலங்களில் அம்பிகை மீனாட்சி..!

 

கால மாற்றங்களினால் தன்னுடைய மக்கள் துன்பப்படக் கூடாது என்பதற்காக, அன்னை மீனாட்சி இங்கே எட்டு கால பூஜைகளிலும் எட்டு திருக்கோலங்களுடன் அருள்கிறாள்.

திருவனந்தல், விளாபூஜை, கால சந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என தினமும் எட்டு கால பூஜை நடக்கிறது.

இந்த எட்டுகாலங்களில் முறையே மஹாஷோடசி, பாலை, புவனை, கௌரி, சியாமளை, பஞ்சதசி, மாதங்கி, ஷோடசி ஆகிய திருக்கோலங்களில் அம்பிகையை பாவித்து வழிபடுவது இத்தலத்திற்கே உரிய ஒன்றாகும்.

 

Views: (297)