“முழு நேர விவசாயியாகிட்டேன்!” – `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஸ்டாலின்

“கொரோனா புண்ணியத்துல முழு நேர விவசாயியாகிட்டேன்!” – `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஸ்டாலின்

விஜய் டிவியின் ஹிட் சீரியலான `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் குடும்பத்தின் மூத்த மகனாக, மளிகைக் கடை நடத்தி தம்பிகளைக் கரைசேர்க்கும் பொறுப்பான அண்ணனாக நடிக்கும் ஸ்டாலினின் சொந்த ஊர் தேனி.

விஜய் டிவியின் ஹிட் சீரியலான `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் குடும்பத்தின் மூத்த மகனாக, மளிகைக் கடை நடத்தி தம்பிகளைக் கரைசேர்க்கும் பொறுப்பான அண்ணனாக நடிக்கும் ஸ்டாலினின் சொந்த ஊர் தேனி. இயக்குநர் பாரதிராஜாவின் உறவினரான இவருக்கு, `சரவணன் மீனாட்சி’ முதல் சீசன், `ஆண்டாள் அழகர்’, `பாசமலர்கள்’ என சீரியல் ஏரியாவில் பெரிய பின்னணி உண்டு. ஆனாலும் இப்போதுவரை சீரியலின் ஷூட்டிங் இருந்தால் மட்டுமே சென்னையில் தங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். மற்ற நாள்களில் சொந்த ஊரில்தான் இருப்பார்.

கொரோனாவால் சீரியல்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள இந்தச் சூழலில் அவரிடம் பேசினோம்.

“எங்க சுத்தினாலும் நாமெல்லாம் கிராமத்தான்தான்யா’ன்னு டைரக்டர் (பாரதிராஜா) அடிக்கடிச் சொல்வார். அவர் பின்னாடி வந்தவன்தானே, அதான் அதே கிராமத்துப் பாசம். சென்னையில இருந்தா மட்டுமே சீரியல், சினிமாவுல நீடிக்க முடியும்னு எத்தனையோ பேர் எங்கிட்டயும் சொன்னாங்க. `அப்படி நீ அங்க தங்கிட்டா, உன் ஊரு, வீடு, காடு, மக்களோட தொடர்பு விடுபட்டுப் போயிடும்’னு மனசு எச்சரிச்சது. சுதாரிச்சிட்டேன்.

திராட்சை, எலுமிச்சைன்னு இங்கன விவசாயம் போயிட்டிருக்கு. கொரோனாவுக்கு முந்தைய நாள்கள்லயே பதினைஞ்சு நாள் சென்னையில ஷூட்டிங் இருந்தா, பதினாறாவது நாள் காலையில தேனியில இறங்கினா, பல்லு தேய்க்கிறேனோ இல்லையோ நேரா தோட்டத்துக்குதான் போவேன். அப்ப அந்தச் செடிகொடிகள்லாம் அசையும் பாருங்க.. `அப்பாடா வந்துட்டியா’னு கேக்கற மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும். உணர்ந்தவங்களுக்கு மட்டுமே இது புரியும்.

இப்ப கோரோனா புண்ணியத்துல கடந்த 15 நாளா முழுநேர விவசாயியா இதுங்க கூடயே கிடக்கறேன். தண்ணி பாய்ச்ச, பழம் பறிக்கன்னு அடிக்கிற வெயில்ல வேர்வை சிந்த உழைச்சா ஒரு பிணி உடல்ல ஒட்டாது. அதனால எம்பாட்டுக்குத் தோட்ட வேலை பார்த்திட்டிருக்கேன்’’ என்றவர், கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டவராய் தொடர்ந்தார்.

“அதேநேரம் கொரோனா பத்தி தினமும் வர்ற செய்திகள்தான் கவலையளிக்குது. மருந்தே கண்டுபிடிக்கப்படலைங்கிற சூழல்ல, வயசானவங்களுக்கு ரொம்ப ஆபத்துன்னு கேக்கறப்ப பகீர்னு இருக்கு. இருபது நாள் லாக் டெளன் முடிஞ்சு இன்னும் 20 நாளுக்கு அது தொடரும்னு அறிவிச்சிருக்காங்க. எவ்வளவோ தினக்கூலிகள் ரொம்பக் கஷ்டப்படுறாங்கங்கிற செய்தியும் வருது. கஷ்டத்தோட கஷ்டமா கொஞ்சம் பொறுத்துப் போறதைத் தவிர நமக்கு வேற வழி இல்லை. இந்த நிலைமையில இருந்து சீக்கிரமா மீண்டு வர்றது, அரசாங்கங்கள் சொல்றதைக் கேட்டு நாம தர்ற ஒத்துழைப்புலதான் இருக்கு’’ என்ற ஸ்டாலினிடம், `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் சக நட்சத்திரங்கள் யாரிடமாவது பேசினீர்களா’ எனக் கேட்டோம்.

`ஒருத்தருக்கொருத்தர் பேசிட்டுதான் இருக்கோம். எங்க இருந்தா என்னங்க, இப்பத்தான் வீடியோ கால் அது இதுன்னு டெக்னாலஜி எங்கேயோ போயிடுச்சே. ஃப்ரியா இருக்கறவங்க போனைப் போட்டுக் கலாய்க்கத் தொடங்கிடுவாங்க. ‘பொறுப்பான அண்ணனா நீங்க, கொரோனா வந்ததும் தம்பிகளையெல்லாம் தவிக்க விட்டுட்டு கிராமத்துக்கு ஓடிட்டீங்களே’னு கூடக் கலாய்ச்சாங்க பசங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரே குடும்பமா பழகிட்டிருந்தோம். அந்த ஷூட்டிங் நாள்கள் மறுபடி எப்ப வரும்கிற ஏக்கம் ஒவ்வொருத்தருக்குமே வரத் தொடங்கிடுச்சு. என்னைப் பொறுத்தவரை `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தை ரொம்பவே மிஸ் பண்றேன். `எல்லாம் கடந்து போகும்’னு ஒரு வாக்கியம் இருக்கில்லையா? `கொரோனா’ தொலைஞ்சு பழையபடி அந்த ஷூட்டிங் நாள் சீக்கிரமே வரும்னு நம்புவோம்’’ என்கிறார்.

நன்றி – விகடன்.

Views: (207)